ஜாகிர் நாயக்குடன் ரகசிய சந்திப்பு: விவரங்களை வெளியிட்ட இந்தியாவின் ரிபப்ளிக் தொலைக்காட்சி
புதுடில்லி: இந்தியக் குடியுரிமை பெற்ற மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் அடைக்கலம் பெற்று இங்கு நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு மலேசியாவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டிருப்பது பல்வேறு தருணங்களில் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. மலேசிய-இந்திய இருதரப்பு நல்லுறவில், ஜாகிர் நாயக் மலேசியாவில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டிருப்பதும், அவருக்கு மலேசிய அரசாங்கம் அடைக்கலம் தந்திருப்பதும் ஒரு சங்கடமான சூழ்நிலையை இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தியுள்ளன.
அண்மையில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் புதுடெல்லிக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருந்தபோது, அங்கு ஊடகங்களுடன் நடத்திய நேர்காணலில் அவரிடம் ஜாகிர் நாயக் குறித்துக் கேட்கப்பட்டது. “ஜாகிர் நாயக்கை மீண்டும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவீர்களா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, அது குறித்த நேரடி பதிலைத் தவிர்த்த அன்வார் இப்ராகிம், “நாங்கள் இதனைப் பகிரங்கமாகப் பேசாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான நான்கு சுவர்களுக்குள் விவாதித்து வருகிறோம்” என்ற பொருளில் பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சிகளுள் ஒன்றான ரிபப்ளிக் டிவி (Republic TV), கடந்த சில நாட்களாக ஜாகிர் நாயக் பற்றிய சில விவரங்களை வெளியிட்டு வருகிறது.
தனது செய்தியாளர் ஒருவரை ஜாகிர் நாயக்கைச் சந்திக்க மலேசியாவுக்கு அனுப்பிய அந்தத் தொலைக்காட்சி அலைவரிசை, அச்செய்தியாளர் அசாமில் இருந்து வந்திருப்பதாகவும், ஜாகிர் நாயக்கின் உரைகளால் ஈர்க்கப்பட்டு அவரைச் சந்திக்கக் கோலாலம்பூர் வந்திருப்பதாகவும் கூறி, அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் ஜாகிர் நாயக்கைச் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்தப் பத்திரிகையாளருக்கும் ஜாகிர் நாயக்குக்கும் இடையிலான அச்சந்திப்பும் உரையாடல்களும் ரகசியமாக புகைப்படக் கருவிகள் மூலம் (கேமரா) மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக ரிபப்ளிக் தொலைக்காட்சி அந்த உரையாடல்களையும் காட்சிகளையும் ஒளிபரப்பி வருவதோடு, அவர் என்ன பேசினார் என்பது குறித்த செய்திகளையும் வெளியிட்டு வருகிறது.
அச்செய்திகளின்படி, ஜாகிர் நாயக் புத்ராஜெயாவில் எங்கு தங்கியிருக்கிறார், அவருக்கு வழங்கப்பட்டுள்ள மூன்றடுக்கு பாதுகாப்பு விவரங்கள், மற்றும் எப்போதும் அவருடன் இருக்கும் பாதுகாவலர்கள் குறித்த பல விவரங்களை வெளியிட்டு ரிபப்ளிக் டிவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய அரசியல் குறித்தும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தற்போது ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் சிஜேபி கட்சி பற்றியும் ஜாகிர் நாயக் வெளியிட்ட கருத்துக்களை ரகசியமாக அந்தப் பத்திரிகையாளர் பதிவு செய்துள்ளார். இந்த காணொலிகளையும், உரையாடல்களையும் கடந்த சில நாட்களாக ரிபப்ளிக் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பி வருகிறது.
இருப்பினும், இந்தச் சம்பவம் மற்றும் தகவல்கள் குறித்து மலேசிய அரசாங்கத் தரப்பில் இதுவரை எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்போ அல்லது அறிக்கையோ வெளியாகவில்லை.

