தான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம்-தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் இடையிலான அரசியல் பயணம்!

(இன்று அக்டோபர் 26-ஆம் தேதி அமரர் தான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் அவர்களின் 82-வது பிறந்த நாள். மஇகா தேசியத் துணைத் தலைவராக 25 ஆண்டுகள் – துணையமைச்சராக பல ஆண்டுகள் – நேசா கூட்டுறவுக் கழகத் தலைவர் – சிலாங்கூர் இந்தியர் சங்கத் தலைவர் – மலேசிய இந்தியர் விளையாட்டு மன்றத் தலைவர் – என பல முனைகளிலும் அரசியல் சமூகப் பணிகள் ஆற்றியவர். அதே வேளையில்  4 அக்டோபர் 1926-ஆம் தேதி பிறந்த தான்ஸ்ரீ மாணிக்கவாசகத்திற்கு இது நூற்றாண்டு தருணம். மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவராகவும், பல ஆண்டுகள் மலேசிய அமைச்சராகவும் பணியாற்றிய அவரை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் பொருட்டு, கடந்த 4 அக்டோபர் 2026-இல் மாணிக்காவின் நூற்றாண்டு விழா தலைநகர் செந்துல் செட்டியார் மண்டபத்தில், மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் மைய அங்கமாக இரா.முத்தரசன் எழுதிய ‘தான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம்: நினைவுகள், அனுபவங்கள், சாதனைகள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலில் மாணிக்காவுக்கும் சுப்ராவுக்கும் இடையிலான நெருக்கமான அரசியல் பயணம் குறித்து இரா.முத்தரசன் எழுதிய கட்டுரை ஒன்றும் இடம் பெற்றிருந்தது. இன்று அமரர் மக்கள் தலைவர் தான்ஸ்ரீ சுப்ராவின் 82-வது பிறந்த நாளை முன்னிட்டு அந்தக் கட்டுரையின் சுருக்கம் 26 அக்டோபர் 2026 தேதியிட்ட மக்கள் ஓசை நாளிதழில் பிரசுரமானது. அந்தக் கட்டுரையின் மறுபதிவு)

தான்ஸ்ரீ மாணிக்காவின் அரசியல் பாதையில் – குறிப்பாக அவரின் இறுதி 10 ஆண்டுகளில் – தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக இடம் பெற்றவர் – மறைந்த தான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் (சுப்ரா).  சுப்ரா முதன் முதலில் மாணிக்காவை எங்கு எப்போது சந்தித்தார் என்ற விவரங்கள் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்படவில்லை.

மலாயாப் பல்கலைக் கழகத்தில் மாணவராக சுப்ரா படித்துக் கொண்டிருந்தபோது, மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை இயக்கத்தில் துணைத் தலைவராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். மலாயாப் பல்கலைக் கழகத்தில் இந்திய மாணவர்கள் நடத்தும் பல நிகழ்ச்சிகளில் மாணிக்கா அடிக்கடி கலந்து கொள்வார். அந்தச் சமயங்களில் சுப்ராவுக்கும் மாணிக்காவுக்கும் இடையில் சந்திப்புக்கள் ஏற்பட்டிருக்கக்கூடும்.

முதலாவது உலகத்தமிழாராய்ச்சி
மாநாட்டு வரவேற்புக் குழுவில் சுப்ரா…

மஇகா பொதுப் பேரவை ஒன்றில் மாணிக்காவுடன் சுப்ரா

பின்னர் 1966-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் மலாயாப் பல்கலைக் கழகத்தின் ஆதரவுடன் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தினார் பேராசிரியர் தனிநாயகம் அடிகளார். அப்போது பல்கலைக் கழகத்தில் அடிகளாரின்  மாணவர்களில் ஒருவராகப் படித்துக் கொண்டிருந்தவர் சுப்ரா. கலைத்துறையில் (Arts faculty) கல்வி கற்ற சுப்ரா, இந்திய ஆய்வியல் துறையில் தமிழிலும் சில பாடங்களைத் தேர்ந்தெடுத்து, தனிநாயகம் அடிகளாரின் மாணவனாகப் படித்தார். இந்திய ஆய்வியல் துறை வெளியிட்ட ‘தமிழ் ஒளி’ என்ற இதழில் சிலப்பதிகாரம் குறித்த இலக்கியக் கட்டுரையை சுப்ரா எழுதியிருக்கிறார்.

முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் வரவேற்புக் குழுவிலும் சுப்ரா மாணவராக இடம் பெற்றிருந்தார். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவில் இடம் பெற்று மாணிக்காவும் முக்கியப் பங்கு வகித்தார். அந்தச் சமயங்களிலும் மாணிக்கா-சுப்ரா சந்திப்புகள் நிகழ்ந்திருக்கக் கூடும்.

ஆனால் பின்னர் முறையான சந்திப்பு மாணிக்கா – சுப்ரா இடையில் நடைபெற்றது 1968-ஆம் ஆண்டில்தான்.

மஇகா தலைமையகத்திற்கு ஆவணங்களை
ஆராய்ச்சி செய்ய வந்த சுப்ரா

துன் ஹூசேன் ஓன்னுடன் சுப்ரா

1968-ஆம் ஆண்டு காலகட்டத்தில் மஇகா தலைமையகம் – இன்று லிட்டல் இந்தியா என்று அழைக்கப்படும் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் – காசி பிராமின் என்ற உணவகத்தின் மேல்மாடியில் இயங்கி வந்தது.

அந்த அலுவலகத்தில் ஒரே ஒருவர்தான் குமாஸ்தாவாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் பெயர் சுவாமிநாதன்.

மஇகா தலைமையகத்திற்கு தன் சொந்த அலுவல் காரணமாக அடிக்கடி வருவார் தான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் இளைய சகோதரர் வழக்கறிஞர் வி.எல்.காந்தன். மஇகா அலுவலகத்திற்கு வரும் போதெல்லாம் ஒரு மேசையில் அமர்ந்து மஇகாவின் பழைய ஆவணங்களைப் பார்வையிட்டுக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கும் ஓர் இளைஞரைப் பார்த்தார் காந்தன்.

கவர்ச்சிகரமானத் தோற்றம் கொண்ட அந்த இளைஞர் அங்கு என்ன செய்கிறார் என அலுவலகப் பணியாளர் சுவாமிநாதனிடம் விசாரித்தார் காந்தன்.

சுப்ராவின் முதுகலைப் பட்டத்திற்கான ஆய்வு நூல்

“மலாயாப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பை முடித்து விட்டு, மாஸ்டர்ஸ் பட்டத்திற்காக ஆய்வுகள் செய்து கொண்டிருக்கும் மாணவர் அவர். ‘1945 முதல் 1955 வரை மலாயா இந்தியர்களின் அரசியல் பங்கேற்பு’ என்ற தலைப்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டிருப்பதால் அதற்காக மஇகாவின் பழைய ஆவணங்களைப் பார்வையிட அடிக்கடி வருகிறார்” என்று கூறிய சுவாமிநாதன் “அவர் பெயர் சுப்ரமணியம்” என்கிறார்.

சுப்ரமணியத்துடன் அறிமுகம் செய்து கொண்ட காந்தன், “எனது சகோதரர் மாணிக்கா, இளைஞர்கள், படித்த பல்கலைக் கழகப் பட்டதாரிகள், அரசியலுக்கு வரவேண்டும் என அடிக்கடி கூறுவார். அதிலும் நீங்கள் மாஸ்டர்ஸ் பட்டத்திற்காக அரசியல் ஆய்வுகள் செய்வதை அறிந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்” என்று கூறி சுப்ரா மாணிக்காவைச் சந்திக்க ஏற்பாடு செய்தார் காந்தன்.

அங்கிருந்துதான் தொடங்கியது சுப்ராவின் வாழ்க்கையில் மாணிக்காவுடனான அரசியல் திருப்பம்.

 மஇகாவின் நிர்வாகச் செயலாளராக
மாணிக்காவால் நியமிக்கப்பட்ட சுப்ரா

அதே வேளையில் ரேடியோ பாலா என அழைக்கப்பட்ட மலேசிய வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய இரா.பாலகிருஷ்ணனுடனும் சுப்ராவுக்கு நல்ல நட்பு இருந்தது. ரேடியோ பாலாவும் மாணிக்காவுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருந்தார். சுப்ராவைப் பற்றி மாணிக்காவிடம் நல்லுரைகள் எடுத்துக் கூற, சுப்ராவைச் சந்தித்தார் மாணிக்கா.

சுப்ராவை மாணிக்காவுக்குப் பிடித்துப் போக, உடனடியாக, மஇகா தலைமையகத்தின் நிர்வாகச் செயலாளராக மஇகா தேசியத் தலைவர் துன் சம்பந்தனின் ஒப்புதலுடன் சுப்ராவை நியமித்தார் மாணிக்கா. சுப்ராவே பல முறை “என்னை நிர்வாகச் செயலாளராக நியமித்தது துன் சம்பந்தன்தான். ஆனால் மாணிக்காதான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்” என கூறியிருக்கிறார்.

இப்படித்தான் தொடங்கியது சுப்ராவுக்கும் மாணிக்காவுக்கும் இடையிலான அரசியல் பயணம். இப்போதிருக்கும் மஇகா தலைமையகக் கட்டடம் 1969-இல் கட்டி முடிக்கப்பட்டு, மஇகா தலைமையகம் அங்கு இயங்கத் தொடங்கியபோது சுப்ரா நிர்வாகச் செயலாளராகத் தனது பணியை அங்கு தொடர்ந்தார்.

சுப்ராவின் திறமையிலும் நேரம் காலமின்றி, அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றும் விதத்திலும் அவர் மீது மிகுந்த அபிமானம் கொண்டார் மாணிக்கா. சுப்ராவின் தமிழ் மொழி ஆளுமை, அரசியல், சமூக ஈடுபாடு போன்ற அம்சங்கள் குறித்தும் மாணிக்காவுக்கு சுப்ராவை மிகவும் பிடித்து விட்டது.

சுப்ராவின் திருமணத்தில் வாழ்த்து கூறும் துன் சம்பந்தன்

1973-இல் துன் சம்பந்தனுடனான தலைமைத்துவப் போராட்டத்தைத் தொடர்ந்து மஇகாவின் ஆறாவது தேசியத் தலைவரானார் மாணிக்கா. அந்தப் போராட்டத்தில் மாணிக்காவுக்கு உறுதுணையாக இருந்தவர் சுப்ரா என்பதைச் சொல்லத் தேவையில்லை. மாணிக்கா தேசியத் தலைவரானதும், உடனடியாக அவர் தலைமைச் செயலாளராக நியமித்தது சுப்ராவைத்தான்.

கட்சியின் நிர்வாகத்தைச் சீரமைக்கவே சுப்ராவை தலைமைச் செயலாளராக நியமித்திருக்கிறேன் என சுப்ராவின் நியமனம் குறித்து அதிருப்தி தெரிவித்தவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாகக் கூறினார் மாணிக்கா. அப்போது சுப்ராவுக்கு வயது 29-தான். சமூகம், அரசியல் எனப் பணியாற்ற வேண்டும் என சுப்ரா வேட்கை கொண்டிருந்தாலும் அவ்வளவு சீக்கிரமாகத் தலைமைச் செயலாளராவதற்கு சுப்ராவுக்கே தயக்கம் இருந்தது – முதலில் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள சுப்ரா மாணிக்காவிடம் மறுத்தார் – எனப் பிற்காலத்தில் அவரின் நெருங்கிய நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும் மாணிக்காவின் கட்டளையை மீறமுடியாமல், அவர் தனக்கு இட்டப் பணியைச் செவ்வனவே நிறைவேற்றத் தொடங்கினார் சுப்ரா.

1974-இல் நாடாளுமன்றத்தில் போட்டியிட வாய்ப்பு

துன் சாமிவேலுவுடன் சுப்ரா…

1974 பொதுத் தேர்தலில் சுப்ராவுக்கு டாமன்சாரா தொகுதியில் (இப்போதைய பங்சார் வட்டாரம்- தற்போது லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி) போட்டியிட வாய்ப்பளித்தார் மாணிக்கா. தொடர்ந்து பிரதமர் துறைக்கான நாடாளுமன்றச் செயலாளர், துணையமைச்சர் என அரசாங்கப் பதவிகளிலும் சுப்ரா முன்னேறுவதற்கு மாணிக்காவே உறுதுணையாக இருந்தார். பிரதமர் துறையிலும் மற்ற துறைகளிலும் துணையமைச்சராகப் பணியாற்றியபோது பிரதமர்களாக அடுத்தடுத்து பதவி வகித்த துன் அப்துல் ரசாக், துன் ஹூசேன் ஓன் ஆகியோரின் அபிமானத்தையும் சுப்ரா பெற்றார்.

சுப்ரா செனட்டராக வாய்ப்பு கொடுத்த மாணிக்கா

1978-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் எதிர்பாராத திருப்பமாக சுப்ரா டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி கண்டார். இருப்பினும் மாணிக்கா ஆதரவோடு சுப்ரா மஇகா தலைமைச் செயலாளராகப் பதவியில் நீடித்தார்.

1979 ஜனவரியில் சுப்ரா செனட்டராக நியமிக்கப்பட்டார். கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச மாநிலத்துக்கான இரண்டு செனட்டர்களில் ஒருவராக சுப்ராவை, துன் ஹூசேன் ஓன் பரிந்துரைக்க, மாணிக்காவும் அதற்கு ஒப்புதல் அளித்தார். 1979 ஜனவரியில் சுப்ரா செனட்டராகப் பதவியேற்றுக் கொண்டார்.

1979 கட்சித் தேர்தல் – தலைமைச் செயலாளராக விலகல்

சுப்ராவின் திருமண விருந்துபசரிப்பில் துன் ஹூசேன் ஓன்-துன் மகாதீர் தம்பதியர் அமர்ந்திருக்க – உரையாற்றும் மாணிக்கவாசகம்…

1979 கட்சித் தேர்தலில் சுப்ரா உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அதிக வாக்குகளில் முதலாவதாக வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து சுப்ராவுக்கு பதிலாக (தான்ஸ்ரீ டத்தோ) எம்.மகாலிங்கத்தைத் தலைமைச் செயலாளராக நியமித்தார் மாணிக்கா. சுப்ரா தேசிய உதவித் தலைவராக மட்டுமே நீடித்தார்.

‘பிராப்தம் வேண்டும்’ – மாணிக்காவின் சித்தாந்தத்தை
அடிக்கடி நினைவுபடுத்திய சுப்ரா

மாணிக்காவின் அரசியல் சித்தாந்தம் ஒன்றை சுப்ரா தன் ஆதரவாளர்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்துவார். துணைத் தலைவராகப் பதவி வகித்த சுப்ரா பல அரசியல் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்தச் சமயங்களில் அடிக்கடி தன் ஆதரவாளர்களைச் சிறு குழுக்களாகச் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வார்.

அந்தச் சந்திப்புக் கூட்டங்களில் சுப்ரா, எப்போதும் மாணிக்காவின் ஒரு சித்தாந்தத்தை நினைவு கூர்வார். “அரசியலில் பதவிகள் கிடைப்பதற்கு ஒருவருக்குப் பிராப்தம் வேண்டும் என மாணிக்கா அடிக்கடி என்னிடம் கூறுவார். அதையே நான் உங்களுக்கும் கூறுகிறேன்” என்பார் சுப்ரா. “பொறுமையாக விட்டுக் கொடுக்காமல் இறுதிவரை போராடுவோம்” என தன் ஆதரவாளர்களுக்கு சுப்ரா ஆறுதல் கூறுவார்.

மாணிக்கா ஆதரவாளர்களை
ஒருங்கிணைத்த சுப்ரா

சுப்ராவின் அரசியல் வளர்ச்சிக்கு மாணிக்காதான் முழுமுதற் காரணமாக இருந்தார் என்றாலும்- ஒரு கட்டத்தில் குறிப்பாக 1979-இல் உதவித் தலைவராக வெற்றி பெற்ற பிறகு, சுப்ரா ஏறத்தாழ மாணிக்காவின் அரசியல் ஆதரவு நிழலிலிருந்து விலகி, தனக்கென ஓர் ஆதரவாளர் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டார். சுப்ரா உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கே மாதங்களில் மாணிக்கா அகால மரணமடைந்தார்.

சுப்ரா எப்போதும் மாணிக்காவின் நிழலில்தான் அரசியல் நடத்துகிறார் – மாணிக்காவின் ஆதரவாளர்களால்தான் கட்சியில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறார் – மாணிக்காவுக்குப் பிறகு சுப்ரா மஇகாவில் அரசியல் ஆதரவை இழந்து விடுவார் – மஇகா அரசியலில் காணாமல் போய்விடுவார் – என்றெல்லாம் விமர்சனங்கள் எப்போதும் முன்வைக்கப்பட்டன. 1979-இல் மாணிக்கா மறைந்தபோது சுப்ரா அரசியலில் இனி எப்படிச் செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. தனது அரசியல் குருவாக சுப்ரா மதித்த மாணிக்கா திடீரென மரணமடைந்தபோது சுப்ராவுக்கும் வயது 35-தான்! மனம் தளராமல் சுப்ரா மாணிக்காவின் பாரம்பரியத்தைத் தொடர முடிவெடுத்தார். நாடு முழுவதும் பயணம் செய்தும், பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டும் மாணிக்கா ஆதரவாளர்களை ஒருங்கிணைத்தார். டத்தோ பத்மாவும் சுப்ராவுக்கு அந்த அரசியல் போராட்டத்தில் உறுதுணையாகச் செயல்பட்டார்.

மாணிக்காவுக்குப் பதிலாக நேசா தலைவரான சுப்ரா…

குறிப்பாக, மாணிக்கா உருவாக்கி தலைவராகச் செயல்பட்ட நேசா கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக மாணிக்காவுக்குப் பின்னர் சுப்ராவை நேசா இயக்குநர் வாரியம் தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் மாணிக்காவின் பாரம்பரியத்தை கட்சியிலும் சமுதாயத்திலும் ஓரளவுக்கு முன்னெடுத்தார் சுப்ரா.

மாணிக்கா மறைந்த பின்னர், பல பொது நிகழ்ச்சிகளில் உரையாற்றும்போதும், நண்பர்கள், ஆதரவாளர்களுடனான சந்திப்புக் கூட்டங்களிலும் எப்போதும் மாணிக்காவின் நற்பண்புகளை, தலைமைத்துவ ஆற்றல்களை, சுப்ரா சிலாகித்துக் கூறுவார். நெருக்கமான நண்பர்களுடன் உரையாடும்போது சில சமயங்களில் மாணிக்காவுக்கும் தனக்கும் இடையிலான சம்பவங்களை விவரிப்பார். மாணிக்காவின் பெருமைகளை மட்டுமே அவர் பொதுவில் பேசுவார். எப்போதுமே அவர் எந்த இடத்திலும் மாணிக்காவைப் பற்றிக் குறைகூறியதில்லை. தனது அரசியல் வளர்ச்சிக்கு மாணிக்காவே முழுமுதற் காரணம் என்பதையும் அவர் எப்போதும் கூறி வந்தார்.

இவ்வாறு தங்களின் வாழ்நாளில் சிறந்த நல்லுறவுடன், தலைமைத்துவப் பண்புகளுடன் அந்த இரு பெரும் தலைவர்களும் வாழ்ந்து மறைந்தனர்.

-இரா.முத்தரசன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *