நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியில் நீடிப்பாரா? விலகுவாரா?
சிரம்பான்: அடுத்தடுத்து நாட்டில் நிகழ்ந்து வரும் அரசியல் திருப்ப சம்பவங்களின் ஒரு பகுதியாக அனைவரும் ஆவலுடன் காத்திருப்பது – நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரத்தின் முடிவுக்காக!
கடந்த ஓரிரு நாட்களாக நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் (படம்) தன் பதவியிலிருந்து விலகி விட்டார் என்ற வதந்திகள் பரவத் தொடங்கின. எனினும் இதுவரை அந்தப் பதவி விலகல் உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) நெகிரி ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிமைக் கண்டிக்கும் – திட்டும் –காணொலி மிக அதிக அளவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
இதுவரை எந்த மலேசிய மாநில மந்திரி பெசாரும் எதிர்நோக்காத சிக்கல்களைச் சந்தித்து வருகிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம். நெகிரி செம்பிலானில் தேசிய முன்னணி வெற்றியைத் தொடர்ந்து மந்திரி பெசாராக நியமிக்கப்பட்ட லாசிம், தன் ஆட்சிக் குழுவினர்களைக் கொண்டு நெகிரி ஆட்சியாளரைப் பதவியிலிருந்து அகற்றியது வரலாறு காணாத சட்டச் சிக்கல். அவ்வாறு செய்ய முடியுமா என்பது ஒருபுறமிருக்க, அந்த முடிவுக்குப் பதிலடியாக அனைத்து ஆட்சிக் குழு உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்தார் நெகிரி ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ்.
இப்போது லாசிம் ஆட்சிக் குழு இல்லாத மந்திரி பெசாராக பதவியில் தொடர்கிறார். இதுவரை எந்த ஒரு மாநிலமும் இதுபோன்ற இக்கட்டான நிலைமையைச் சந்தித்ததில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மாநில சுல்தான்களுக்கும் மந்திரி பெசார்களுக்கும் இடையில் பிரச்சனைகள் எழுவது மலேசிய அரசியலில் புதிதல்ல. பல முறை நடந்திருக்கிறது. சில தடவைகள் அத்தகைய மோதல்களால் மந்திரி பெசார்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். சில மந்திரி பெசார்களுக்கு சுல்தான்களிடம் இருந்து திட்டுக்களும் கண்டனங்களும் கிடைப்பது சகஜம். ஆனால் இவையெல்லாம் எப்போதும் நான்கு சுவர்களுக்குள்தான் நடக்கும்.
இப்போது முதன் முறையாக நெகிரி மாநில ஆட்சியாளர் பொது நிகழ்ச்சியில் மந்திரி பெசாரைத் திட்டியிருக்கிறார். அருகில் வராதே எனத் துரத்தியிருக்கிறார்.
தான் ஆட்சியாளர் இல்லை என மந்திரி பெசார் கடிதம் ஒன்றை தேசிய அரண்மனையின் முத்திரைக் காப்பாளருக்கு அனுப்பியிருக்கிறார் என்றும் ஆட்சியாளர் அவரைச் சாடியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்தக் கடிதத்தைப் பகிரங்கமாக வெளியிடும்படி ஜசெகவினர் அறைகூவல் விடுத்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்தில் நெகிரி ஆட்சியாளருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றாலும், அன்வார் இப்ராகிம் தலைமையிலான மத்திய அரசாங்கம் இன்றுவரை அவரையே நெகிரி மாநில ஆட்சியாளராக அங்கீகரித்திருக்கிறது.
நெகிரி அரசியலில் அடுத்தகட்டம் என்ன என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன. பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரோடு இணைந்து புதிய ஆட்சிக் குழு அமைக்கப்படலாம் என்பது நெகிரி மாநில அரசியலின் புதிய திருப்பம்.
இஸ்மாயில் லாசிமுக்குப் பதிலாக புதிய மந்திரி பெசார் ஒருவர் நியமிக்கப்பட்டு, புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பார்கள் என்ற ஆரூடமும் நிலவுகிறது.
இதற்கிடையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட 10 ஆட்சிக் குழு உறுப்பினர்களும் தங்களை அந்தப் பதவியில் இருந்து நெகிரி ஆட்சியாளர் நீக்கியது செல்லாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளனர். நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரின் ஒப்புதலுடன் ஆட்சிக் குழு உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்ட தங்களை, நெகிரி ஆட்சியாளர் நீக்கியது சட்டப்படி செல்லாது என அறிவிக்கக் கோரி, நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

