மலாக்கா தேர்தல்: காடெக் தொகுதியில் மஇகா மீண்டும் வெல்லுமா?
மலாக்கா: வரவிருக்கும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தேசிய முன்னணி (Barisan Nasional) 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், பக்கத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) கூட்டணியும் 28 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
ம.இ.கா பாரம்பரியமாகப் போட்டியிட்டு வரும் சட்டமன்றத் தொகுதியான காடேக் (Gadek) தொகுதியில், இம்முறை ம.இ.கா / தேசிய முன்னணி வேட்பாளராக நடராஜா செல்லப்பா களமிறங்குகிறார். கடந்த 2021 மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் ம.இ.கா சார்பில் இங்கு போட்டியிட்ட டத்தோ பி. சண்முகம் 559 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் (EXCO) இந்தியச் சமூகத்தைப் பிரதிநிதித்தும் அவர் பணியாற்றினார்.
அவரை எதிர்த்து ஜசெக (DAP) வேட்பாளராக ஜி. சாமிநாதன் போட்டியிட்டார். எனினும், இம்முறை சாமிநாதனுக்கு ஜசெக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் இதே சாமிநாதன்தான் கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் ஜசெக சார்பில் போட்டியிட்டு காடெக் தொகுதியில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து இந்தியர்களின் சார்பில் மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் சேவையாற்றினார்.

பக்கத்தான் ஹரப்பான் சார்பில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலின்படி, 28 தொகுதிகளில் காடேக் தொகுதி ஜசெகவுக்கு (DAP) ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் கே. ஜெகசீலன் ஜசெக/பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காடேக் தொகுதியில் மூன்றாவது வேட்பாளராக பெர்சாமா கட்சி சார்பில் லெவின் பாலபிரபாகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். லெவின் உள்ளிட்ட 16 பெர்சாமா வேட்பாளர்கள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகளைத் தங்களின் தொகுதிகளின் தொடங்கி விட்டார்கள்.
மற்ற கூட்டணிகள் அல்லது கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே, தற்போதைக்கு இந்த மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், காடேக் தொகுதியில் பாஸ் (PAS) கட்சியோ அல்லது பெரிக்காத்தான் நேஷனல் (Perikatan Nasional) சார்பிலான கட்சிகளோ போட்டியிடாவிட்டால், ம.இ.கா / தேசிய முன்னணி வேட்பாளரான நடராஜாவின் வெற்றி வாய்ப்பு மேலும் பிரகாசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், இத்தொகுதியில் மலாய் வாக்காளர்கள் 60.9% ஆக உள்ளனர். இதனால், மலாய் வாக்குகள் பெரும்பாலும் தேசிய முன்னணி ஆதரவாகவே செல்லும் எனக் கருதப்படுகிறது. இத்தொகுதியில் சீன வாக்காளர்கள் 20.8% மற்றும் இந்திய வாக்காளர்கள் 17.1% உள்ளனர். மலாக்காவில் இந்திய வாக்காளர்கள் மிக அதிகமாக உள்ள தொகுதி காடெக் ஆகும்.

அறிவிக்கப்பட்டிருக்கும் மூன்று கட்சிகளின் வேட்பாளர்களுமே இந்திய வேட்பாளர்கள் என்பதால், இந்திய வாக்காளர்களின் வாக்குகள் பிளவுபடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அச்சூழ்நிலையில், பாஸ் அல்லது வேறு மலாய்க் கட்சிகள் போட்டியிடாத பட்சத்தில், பெரும்பான்மையான மலாய் வாக்குகள் தேசிய முன்னணிக்குச் செல்லும் என்பதால், நடராஜாவின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலாக்கா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் அக்டோபர் 31-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதன் பின்னரே காடேக் தொகுதியில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் குறித்த முழு விவரமும் தெரியவரும்; அதன்பின் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

