சரவாக் தேர்தலில் பிகேஆர் கட்சி போட்டியிடுமா?

கூச்சிங் : மலேசியாவுக்கு இது தேர்தல் காலம். அடுத்தடுத்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள். நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்பட்டு 16-வது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்ற பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பது ஒரு புறம். நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா தேர்தலை நோக்கி நாம் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் சரவாக் சட்டமன்றமும் அக்டோபர் 26-ஆம் தேதியோடு கலைக்கப்படும் என சரவாக் முதல்வர் அபாங் ஜோஹாரி ஓபெங் அறிவித்து விட்டார்.

அக்டோபர் 26-ஆம் தேதியிலிருந்து அடுத்த 60 நாட்களுக்குள் சரவாக்கின் 13-வது சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். சரவாக் சட்டமன்றத் தேர்தல்களை நடத்த உகந்த தேதிகளைத் தேர்ந்தெடுக்க மலேசியத் தேர்தல் ஆணையம் எதிர்வரும் நவம்பர்  6-ஆம் தேதி கூடுகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் சரவாக்கின் 82 சட்டமன்றத் தொகுதிகளில் 76-ஐ கைப்பற்றி அபாங் ஜோஹாரி தலைமையிலான காபூங்கான் பார்ட்டி சரவாக் (ஜிபிஎஸ்) கூட்டணி அபார வெற்றி பெற்றது. எஞ்சிய 6 தொகுதிகளில் பார்ட்டி சரவாக் பெர்சாத்து நான்கிலும், ஜசெக இரண்டிலும் வெற்றி பெற்றன.

இந்தமுறை தொகுதிகளில் எண்ணிக்கை 99-ஆக உயர்த்தப்பட்டிருந்தாலும், தேர்தல் ஆணையம் அந்த மறுசீரமைப்புக்கு இன்னும் ஒப்புதல் தரவில்லை. எனவே, மீண்டும் பழைய கட்டமைப்பின்படி 82 தொகுதிகள் அடிப்படையில்தான் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்.

தீபகற்ப மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்ட கட்சிகள் சரவாக்கிற்கு வேண்டாம் என்ற முழக்கங்கள் எப்போதும் நிலவி வரும் அந்த மாநிலத்தில் இந்த முறையும் ஜிபிஎஸ் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் பிரதமர் அன்வாருக்கு ஒரு இக்கட்டான சிக்கல் எழுந்துள்ளது.

சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணி அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. இரண்டாவது துணைப் பிரதமர் பதவியையும் பெற்றுள்ளது. அடுத்த 16-வது பொதுத் தேர்தலில் ஜிபிஎஸ் கூட்டணியின் ஆதரவு இருந்தால்தான் எந்தக் கூட்டணியும் மத்திய அரசாங்க ஆட்சியை அமைக்க முடியும் என்ற நிலைமை உருவாகி வருகிறது.

மலேசியாவுக்கும் சரவாக்கிற்கும் இடையிலான 1963-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றப் போவதாக அன்வாரும் சூளுரைத்து அதற்கேற்ப செயல்பட்டு வருகிறார். இதனால் அபாங் ஜோஹாரிக்கும் அவருக்கும் இடையில் சிறந்த நல்லுறவு ஏற்பட்டிருக்கிறது. 16-வது பொதுத் தேர்தலிலும் இந்த நட்புறவு தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் அன்வாரின் பிகேஆர் கட்சி ஜிபிஎஸ் கூட்டணியை எதிர்த்து சரவாக் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குமா? அபாங் ஜோஹாரி தலைமையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யுமா? அல்லது போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளுமா? ஜிபிஎஸ் கூட்டணியோடு ஏதாவது ஒரு முனையில் தேர்தல் உடன்பாடு காணுமா? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுந்துள்ளன.

அன்வார் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்ப்போம்!

ஜசெகவுக்கும் சரவாக்கில் இக்கட்டான நிலை

சரவாக்கில்  அன்று தேசிய முன்னணி ஆட்சியில் இருந்தபோதும் சரி – இப்போது ஜிபிஎஸ் கூட்டணி ஆட்சியின்போதும் சரி – ஜசெக எப்போதுமே எதிர்க்கட்சி அரசியலைத்தான் முன்னெடுத்து வந்துள்ளது.

2022 பொதுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அன்வார் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க முற்பட்டபோது அவருக்கு சரவாக் ஜிபிஎஸ் கூட்டணியின் ஆதரவு தேவைப்பட்டது. அந்த நேரத்தில் ஜசெகவுக்கும் சரவாக் முதலமைச்சர் அபாங் ஜோஹாரிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் முற்றி, இரு தரப்புக்கும் இடையில் மோதல்கள் வலுத்திருந்தன. அதைச் சமாளிக்கும் விதமாக லிம் குவான் எங் தன் முகநூல் பக்கத்தில் சரவாக் மாநிலம் குறித்த தன் கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக், நேரடியாக கூச்சிங் பறந்து சென்று ஜசெகவின் மோதலை மறந்து விட்டு ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள் என அபாங்கிடம் கோரினார். அபாங் ஜோஹாரியும் மனம் மாறி ஆதரவு தந்தார். ஜிபிஎஸ் மடானி ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றது. சரவாக் துணைப் பிரதமர் பதவியையும் அமைச்சுப் பொறுப்புக்கள் சிலவற்றையும் பெற்றது.

இப்போது என்ன செய்யப் போகிறது ஜசெக?

16-வது பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே எஞ்சியிருக்கிறது. இந்நிலையில் மீண்டும் ஆளும் ஜிபிஎஸ் கூட்டணிக்கு எதிராக சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடப் போகிறதா? அல்லது வென்றது இரண்டே தொகுதிகள்தான் என்பதால் அவற்றை விட்டுக் கொடுத்துவிட்டு போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளப் போகிறதா? அல்லது பிகேஆர், ஜசெக இரண்டும் பக்காத்தான் கூட்டணியின் மூலமாக ஏதாவது ஒருவகையில் ஜிபிஎஸ் கூட்டணியுடன் தேர்தல் உடன்பாட்டை சரவாக் தேர்தலில் காண்பார்களா?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *