“தீபாவளி என்ற சொல்லே சரியானது”- மலேசிய கிறிஸ்துவ தமிழ் வளர்ச்சிப் பேரவையின் ஆலோசகர் ஞான சைமன்

கோலாலம்பூர்: பன்னெடுங்காலமாக உலக அளவில் இந்தியர்கள் கொண்டாடும் தங்களின் பண்டிகைகளில் முதன்மையானதாகக் கருதுவது தீபாவளித் திருநாளாகும். இந்தச் சொல் பல ஆண்டுகளாக மலேசியாவிலும் பயன்படுத்தப்பட்டு வரும் சொல்லாகும்.

ஆனால் இப்போது ‘தீவாளி’ என்ற ஒரு புதுச் சொல்லை அதுவும் பயன்பாட்டில் இல்லாத ஒரு சொல்லை அறிமுகப்படுத்தி மொழியையும் இந்தியர்களின் பண்டிகையை மாற்றியமைக்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது என்று மலேசிய கிறிஸ்துவ தமிழ் வளர்ச்சிப் பேரவையின் ஆலோசகர் ஞான சைமன் (படம்) தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட சிறப்புக் கடைகளுக்கான அலங்கார வளைவுகள், பதாகைகளில் ‘Diwali’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறான சொல்லாகும். ஒரு பண்டிகையின் தன்மையையும் ஓர் இனத்தின் மொழியையும் சீர்குலைப்பதாகும் என்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஞான சைமன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

“தீபாவளி என்ற சொல் வட மொழி தழுவிய கூட்டுச் சொல் என்றாலும் அதில் அர்த்தமுண்டு. தீபம் – ஆவளி – தீபாவளி. தீபம் என்றால் விளக்கு அல்லது ஒளி என்று பொருள். ஆவளி என்றால் வரிசை என்று பொருள் கொள்ளலாம். தீவாளி என்ற சொல்லுக்கு நேரடிப் பொருள் இலக்கண நூல்களில் இல்லை. மொழிக்கும் இனத்திற்கும் தொடர்பு இல்லாத இந்தச் சொல் தொலைந்து போகட்டும் என்று கொள்வோம். இந்தத் தவறைச் சாதாரணமானவர்கள் செய்திருந்தால் தெரியாமல் செய்திருக்கிறார்கள் என்று கருதலாம். ஆனால் பொறுப்புள்ளவர்கள் இந்தத் தவறைச் செய்து இருக்கக்கூடாது” என்றும் ஞான சைமன் வலியுறுத்தினார்.

தீபாவளி என்ற சொல்லே சரியானது என்று ம.இ.கா. தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன், பிரதமர் இலாகாவின் அமைச்சர் ஹன்னா யோவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கடிதம் எழுதியும் இன்னும் அந்தச் சொல் மாற்றப்படாமலும் திருத்தம் செய்யப்படாமலும் இருப்பது இந்தியர்களிடையே பலத்த அதிருப்திகளைத் தோற்றுவித்திருக்கிறது.

“இந்தத் தவறும் இந்தப் போக்கும் இப்படியே அல்லது அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடருமானால் எதிர்காலத்தில் நாம் சன்னமாகச் சத்தம் இல்லாமல் மொழியை இழந்து விடுவோம். மொழியை இழந்தால் யாரும் அழிக்காமலேயே தானாகவே இனம் இல்லாமல் அழிந்து போய்விடும் ஆபத்தை நாம் அறிய வேண்டும். இந்தியர்களை பிரதிநிதிக்கிறது மஇகா. அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் அமைச்சரைக் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப தீபாவளி என்ற சரியான சொல்லைப் பயன்படுத்தி பிரிக்பீல்ட்ஸில் உள்ள அலங்கார வளைவுகளையும் பதாகைகளையும் மாற்றியமைக்கும்படி மொழியின் மீது உள்ள பற்றின் காரணமாக மலேசிய கிறிஸ்துவ தமிழ் வளர்ச்சிப் பேரவையின் தலைவர் செபஸ்தியன் தோமா, செயலாளர் லியோ மரியதாசு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பேரவையின் ஆலோசகருமான ஞான சைமன் ஆகிய மூவரும் தங்களின் அறிக்கையில் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *