மலாக்கா பெம்பான் தொகுதி: அக்மால் சாலேயின் அண்ணன் சாதிப்பாரா?
மலாக்கா: மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் உற்று நோக்கும் தொகுதி பெம்பான். காரணம் சர்ச்சைக்குரிய அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் அக்மால் சாலேயின் அண்ணன் டாக்டர் முகமட் சோலேஹின் சாலே (படம்) பெர்சாமா வேட்பாளராக இங்கு போட்டியிடுகிறார். ஒரு மருத்துவரான சோலேஹின் மலாக்காவிலும் ஜோகூரிலும் தனியார் மருத்துவமனைகளை நடத்தி வருபவர். தம்பி அம்னோவில் இளைஞர் பகுதித் தலைவராக அதிரடி கிளப்ப, அண்ணனோ, ரபிசி ரம்லியுடன் பெர்சாமா கட்சியில் இணைந்துள்ளார்.
தற்போது மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அக்மால் சாலே மலாக்கா தேர்தலில் அந்தத் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடுகிறார். அடுத்து வரும் பொதுத் தேர்தலில் ஜாசின் நாடாளுமன்றத் தொகுதியில் அக்மால் சாலே போட்டியிடுவார் என ஆரூடங்கள் கூறப்பட்டாலும், தற்போதைக்குத் தனது மெர்லிமாவ் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள முன்வந்துள்ளார். மெர்லிமாவ் தொகுதி ஜாசின் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
பெம்பான் இன்னொரு சுவாரசியத்தையும் கொண்டிருக்கிறது. இங்கு 17.3 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் இதுவரையில் இந்திய வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை. 60.5 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களையும் 21.1 விழுக்காட்டு சீன வாக்காளர்களையும் கொண்ட பெம்பான் தொகுதியில் 2021-இல் தேசிய முன்னணி சார்பில் இந்தத் தொகுதி மசீசவுக்கு ஒதுக்கப்பட்டது. மசீசவை எதிர்த்து ஜசெக வேட்பாளர் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெற்றதோ பெர்சாத்து வேட்பாளர் – அதுவும் வெறும் 328 வாக்குகள் வித்தியாசத்தில்! எனவே, இந்த முறை இங்கு கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம். பெர்சாத்து மீண்டும் இங்கு இந்த முறை போட்டியிடுகிறது. பக்காத்தான் ஹாரப்பான் பெர்சாத்து கட்சியுடன் கண்ட உடன்பாட்டிற்கு ஏற்ப பெம்பான் தொகுதியை பெர்சாத்துவுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது.
60 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மலாய் வாக்காளர்கள் இருக்கும் இந்தத் தொகுதியை அம்னோ இந்த முறை பாஸ்/வாவாசான் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. மசீசவுக்கு இங்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மசீசவின் அண்மைய வெளிநடப்புக்கு இந்தத் தொகுதி கிடைக்காதது ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
பாஸ்/வாவாசான் – பெரிக்காத்தான் கூட்டணி சார்பில் எந்தக் கட்சி போட்டியிடும் என்பது இன்றிரவுக்குள் தெரிந்து விடும்.

