மலாக்கா: 4 தொகுதிகளில் பெர்சாத்து ஏன் பக்காத்தானுடன் மோதுகிறது?

மலாக்கா: பெர்சாத்து முதலில் 8 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிப்பு வெளியானது. அதில் மஇகா போட்டியிடும் காடெக் தொகுதியும் ஒன்று என அறிவிக்கப்பட்டது. ஆனால், வேட்புமனுத் தாக்கலின்போது ஏனோ சில பின்னணிக் காரணங்களால் பெர்சாத்து காடெக் தொகுதியில் போட்டியிடாமல் பெர்சாத்து ஒதுங்கிக் கொண்டது. தற்போது 7 தொகுதிகளில் மட்டுமே முஹிடின் யாசின் தலைமையிலான பெர்சாத்து களமிறங்குகிறது.

காடெக் தொகுதியில் இப்ராகிம் அலி தலைமையிலான புத்ரா கட்சி போட்டியிடுகிறது. இப்ராகிம் அலி, அம்னோவின் முன்னாள் தலைவர்களில் ஒருவர் என்பதோடு, கிளந்தான் மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். புத்ரா சார்பில் லைலா நோரிண்டா போட்டியிடுகிறார். இவர் 2021 மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 68 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தவர். இந்த முறை புத்ரா கட்சி அவரைத் தத்தெடுத்துக் கொண்டுள்ளது. இவர் ஒருவர் மட்டுமே மலாய் வேட்பாளர் என்பதால் 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மலாய் வாக்கு வங்கியைக் குறி வைத்துள்ளார் லைலா நோரிண்டா.

4 தொகுதிகளில் பெர்சாத்து-பக்காத்தான் மோதல்! வியூகம் என்ன?

பெர்சாத்து போட்டியிடும் ஏழு தொகுதிகளில் – 2021 மலாக்கா தேர்தலில் அது வெற்றி பெற்ற சுங்கை ஊடாங், பெம்பான் தொகுதிகளும் அடக்கம். இந்த இரண்டு தொகுதிகளோடு, பெர்சாத்து போட்டியிடும் லெண்டு, பந்தாய் குண்டோர் தொகுதிகளிலும் பக்காத்தான் தன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. பெர்சாத்துவுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது.


மேலும் படிக்க:

பெர்சாத்து, மடானி அரசாங்க உடன்பாடு! அம்னோவைப் பதற்றத்தில் வைத்திருக்கும் அன்வார்!


எஞ்சிய 3 தொகுதிகளில் பெர்சாத்து பக்காத்தானுடன் மோதுகிறது. கிளெபாங் தொகுதியில் பிகேஆர் வேட்பாளருடனும், ஆயர் குரோ, பெங்காலான் பத்து ஆகிய தொகுதிகளில் ஜசெகவுடனும் பெர்சாத்து களம் காண்கிறது. பக்காத்தானுடன் தேர்தல் உடன்பாடு கண்டிருந்தும் இவ்வாறு போட்டியிடுவது கூட, ஒரு வியூகமாகக் கருதப்படுகிறது.

காரணம், ஆயர் குரோ தொகுதியில் 42.4%, பெங்காலான் பத்து தொகுதியில் 64.1% என மலாய் வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்த வாக்குகளை பெர்சாத்து பிளவுபடுத்தினால் அதன்மூலம் இந்தத் தொகுதிகளில் ஜசெக வெற்றி பெறும் சாத்தியங்கள் அதிகரிக்கும்.

கிளெபாங் தொகுதியில் 66.9% மலாய் வாக்காளர்கள் உள்ளனர். பிகேஆர் இங்கு போட்டியிடுவதால் கணிசமான மலாய் வாக்குகளை பெர்சாத்து பிளவுபடுத்தினால், இந்தியர்கள் (2.3%), சீனர்கள் (28.6%) வாக்குகளின் ஆதரவுடன் பிகேஆர் வெல்லும் வாய்ப்பு ஏற்படும்.

எனவே, இந்த மூன்று தொகுதிகளிலும் பெர்சாத்து பக்காத்தானுடன் மோதுவது கூட பல்வேறு வியூகங்களுடன் முன்னேற்பாடுகளுடன்தான் நடைபெறுகிறது என்பதை ஊகிக்கலாம்.

மலாக்காவில் வியூகங்களுடன் களமிறங்கும் பக்காத்தான்

ஜோகூர் மாநிலத் தேர்தலை யாரும் எதிர்பாராத வண்ணம் முன்கூட்டியே தேசிய முன்னணி அறிவித்ததால், பக்காத்தான் அதனை எதிர்பார்க்கவில்லை. போதிய முன்னேற்பாடுகளையும் அதனால் முன்கூட்டியே செய்ய இயலவில்லை.

நெகிரி செம்பிலான் தேர்தலோ ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் எடுத்த அவசர முடிவின் காரணமாக, தேசிய முன்னணிக்கு சாதகமாக அமைந்தது. தாங்கள் ஆட்சியில் இருந்தும், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நிறைய கால அவகாசம் இருந்தும், அவசரப்பட்டு ஜோகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைத்ததால் அதற்குப் பதிலடியாக நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்தது பக்காத்தான். அந்த முடிவுக்கு அந்தோணி லோக் விடுத்த சவால்தான் காரணம்.

நெகிரியிலும் வியூகங்கள் இன்றி நம்பிக்கையுடன் களமிறங்கிய பக்காத்தான் தோல்வியே கண்டது. தற்போது மலாக்கா தேர்தலில் பிகேஆர் கட்சியின் தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தலைமையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறது பக்காத்தான். சில வியூகங்களையும் சாமர்த்தியமாக வகுத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் பெர்சாத்துவுடனான கூட்டணி.

பெர்சாத்துவுடனான கூட்டணி மலாக்காவில் வெற்றி பெற்றால் அல்லது சில தொகுதிகளில் கூடுதல் வாக்குகள் பெற முடிந்தால், பக்காத்தான்-பெர்சாத்து தேர்தல் உடன்பாடு மற்ற மாநிலங்களிலும் 16-வது பொதுத் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

-இரா.முத்தரசன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *