பெர்சாத்து, மடானி அரசாங்க உடன்பாடு! அம்னோவைப் பதற்றத்தில் வைத்திருக்கும் அன்வார்!
புத்ரா ஜெயா: மலாக்கா தேர்தலிலும் ஜோகூர், நெகிரி செம்பிலான் போல, தேசிய முன்னணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக் கூடும். ஆனால், அத்தகைய வெற்றிக்குப் பின்னர், நெகிரி தேர்தலுக்குப் பின்பு அம்னோ முன்வைத்த வெற்றி முழக்கங்கள் போன்று, இந்த முறை ஒலிக்க வாய்ப்பில்லை. அடக்கி வாசிப்பார்கள். முடிந்தால் மத்திய அரசாங்கத்திலிருந்து அம்னோவை விலக்கிப் பாருங்கள் என சவால் விட மாட்டார்கள்.
காரணம், அன்வாரின் மடானி அரசாங்கத்திற்கும், பெர்சாத்து கட்சிக்கும் மற்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் இடையில் கையெழுத்திடப்பட்டிருக்கும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
அன்வாரின் அரசியல் வியூகங்களைப் பற்றி பின்வருமாறு கூறலாம்:
“அன்வார் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றியடையவாரோ தோல்வியடைவாரோ! ஆனால் அதற்கு முன்பாக 25 ஆண்டுகாலம் நாட்டின் பிரதமராக வருவதற்குப் போராடிய ஒரு மனிதன் – அதிலும் 10 ஆண்டுகள் சிறைக்குள் அடைக்கப்பட்டுப் போராடிய ஒரு மனிதன் – இப்போது தன் செல்வாக்கில் சில பின்னடைவுகளைச் சந்தித்திருந்தாலும் – ஒரு பிரதமராக 16-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள – தன் பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள – என்னென்ன வியூகங்களை வகுத்துப் போராடப் போகிறார் என்ற சுவாரசியங்களைச் சொல்லப் போகிறது 16-வது பொதுத் தேர்தல்”
அத்தகைய வியூகங்களில் ஒன்றைக் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி அதிரடியாக அரங்கேற்றியிருக்கிறார் அன்வார். பெர்சாத்து கட்சிக்கும் அன்வாரின் மடானி அரசாங்கத்திற்கும் இடையிலான ஓர் உடன்பாட்டு ஒப்பந்தம்தான் அந்த வியூகம். மேலோட்டமாகப் பார்க்கும்போது இது சாதாரண அரசியல் உடன்பாடு போலத் தெரிந்தாலும் – பலமுனைகளைக் கொண்ட வியூகங்கள் அதன் உள்ளே பொதிந்திருக்கின்றன என்பதைக் காணலாம்.
ஒத்துழைப்பு உடன்பாடு முதலில் சிலாங்கூர் மாநில அரசுக்கும் பெர்சாத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்படும் என அனைவரும் எதிர்பார்த்திருக்க – அதிரடித் திருப்பமாக நேரடியாக அரசாங்கத்துடனேயே பெர்சாத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இதன் மூலம் ஒரே கையெழுத்தில் சில காய்களை அரசியல் அரங்கில் வீழ்த்தியிருக்கிறார் அன்வார்.
நாடாளுமன்ற – சிலாங்கூர் சட்டமன்ற – வலிமையைப்
பெருக்கியிருக்கும் பக்காத்தான் அரசாங்கம்
பெர்சாத்து – மடானி அரசாங்கத்திற்கு இடையிலான உடன்பாட்டினால் விளையக் கூடிய முதல் அனுகூலம் மத்திய அரசாங்கத்தின் நாடாளுமன்ற ஆதரவு பலம் 126 ஆக உயர்ந்திருக்கிறது. பெர்சாத்துவிலிருந்து 6 பேர், மூடா கட்சியிலிருந்து சைட் சாதிக் என 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் 6 சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இத்தகைய ஒப்பந்தத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
நடப்பு நாடாளுமன்றத் தவணைக் காலம் முடியும்வரை அவர்களின் ஆதரவு அன்வார் அரசாங்கத்திற்குக் கிடைக்கும்.
இனிமேல் எங்களை விலக்கிப் பாருங்கள் – உங்களின் அரசாங்கம் கவிழ்ந்து விடும் – என்ற அம்னோவின் முஷ்டிகளைத் தூக்கிய முழக்கங்களை அதிகமாகக் கேட்க முடியாது. அடக்கி வாசிப்பார்கள். அப்படியே அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளே புகுந்து அமைச்சர்களாகி விடுவார்கள் – தங்களின் செல்வாக்கும் சரிந்து விடும் – என்ற அச்சமும் அம்னோ தலைவர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
அடுத்து பெர்சாத்து கட்சி சிலாங்கூர் மாநில அரசாங்கத்துடன் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவிருக்கிறது. அதன் மூலம் பெர்சாத்துவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு தெளிவான பெரும்பான்மையோடு சிலாங்கூர் அரசாங்கம் 2028 வரை ஆட்சியில் தொடரும். சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தல் 2023-இல் நடைபெற்றதால் 2028-இல்தான் அதன் தவணைக் காலம் முடிவடைகிறது.
2027-இல் நடைபெறவிருக்கும் 16-வது பொதுத் தேர்தலில் எந்தக் கூட்டணி வெற்றி பெற்றாலும், 2028 வரை சிலாங்கூரில் பக்காத்தான் அரசாங்கம் ஆட்சியில் தொடர முடியும்.
மலாக்கா தேர்தலிலும் பிரதிபலிக்குமா?
பெர்சாத்து-மடானி அரசாங்கத்திற்கு இடையிலான உடன்பாடு எனக் கூறப்பட்டாலும், இது உண்மையில் பெர்சாத்து – பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கு இடையிலான ஒப்பந்தம்தான்.
பெர்சாத்து கூட்டணியால் அன்வாருக்கு ஏற்பட்டிருக்கும் இன்னொரு சாதகம் மலாய்-முஸ்லீம் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது. இப்போதைக்கு, அம்னோவும் பாஸ் கட்சியும் சேர்ந்தால் மட்டுமே மலாய் முஸ்லீம் ஒற்றுமை என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை முறியடிக்கும் விதத்தில் பெர்சாத்து என்ற மலாய்-முஸ்லீம் கட்சியோடு அன்வார் உடன்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறார்.
அம்னோவுக்கு மாற்று சக்தியாக மகாதீர்-மொகிதின் யாசின் இருவரும் இணைந்து உருவாக்கிய கட்சி பெர்சாத்து என்பதையும் – அதன் தலைமைத்துவம்தான் 2018 பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியது என்பதையும் – நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, இதன் மூலம் மலாக்காவில் மலாய் வாக்காளர்களிடையே மனமாற்றம் ஏற்படுமா என்பதையும் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டும்.
21 தொகுதிகளில் பக்காத்தான் களமிறங்க, பெர்சாத்து 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காடெக் தொகுதியில் பெர்சாத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அங்கு போட்டியிடாமல் பெர்சாத்து ஒதுங்கிக் கொள்ள, இப்ராகிம் அலி தலைமையிலான புத்ரா கட்சி அங்கு போட்டியிடுகிறது.
ஷெராட்டன் நகர்வு என்ற பெயரில் பக்காத்தானுக்குத் துரோகமிழைத்த கட்சி பெர்சாத்து என்ற குறைகூறல்கள், முணுமுணுப்புகள் பக்காத்தான் தரப்பில் எழுந்திருந்தாலும், சரிந்து வரும் தங்களின் செல்வாக்கைத் தூக்கி நிறுத்தும் ஒரு முயற்சியாக பக்காத்தான் ஆதரவாளர்கள் பெர்சாத்துவுடனான ஒத்துழைப்பு உடன்பாட்டைப் பார்க்கிறார்கள்.
பெர்சாத்துவுடனான உடன்பாட்டால், சில நூறு வாக்குகளாவது பக்காத்தானுக்குக் கிடைத்தாலும் அதனால் நாடு தழுவிய அளவில் பல சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு பக்காத்தானுக்குக் கிடைக்கும். முதல் கட்டமாக, மலாக்கா தேர்தலில் இந்த உடன்பாடு எத்தகைய வரவேற்பைப் பெறும் என்பதற்கான விடை கிடைக்கும்.
சாஹிட்டுக்கு எதிரான அன்வாரின் வியூகமா?

பெர்சாத்து – மடானி அரசாங்கத்திற்கிடையிலான உடன்பாடு கையெழுத்திடப்பட்ட காணொலிகளையும், புகைப்படங்களையும் பார்க்கும்போது அந்த நிகழ்ச்சி பல்வேறு மறைமுறைச் செய்திகளைக் கூறுவதை உணர முடியும்.
அந்த நிகழ்ச்சியில் சாஹிட் ஹாமிடி காணப்படவில்லை. அன்வாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் சாஹிட்டுக்கு பெர்சாத்துவின் வரவு திருப்தியளிக்கவில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை. அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டது நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் –அம்னோவைச் சேர்ந்த – அசாலினா ஒத்மான் மற்றும் துணைப் பிரதமர் பாடில்லா யூசோப். பெர்சாத்து தலைவர் முஹிடின் யாசின் நேரடியாகக் கலந்து கொண்டிருக்கிறார். அஸ்மின் அலியும் கலந்து கொள்ளவில்லை. அவர் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த ஒப்பந்தம் மூலம் இனி, பெர்சாத்துவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான அரசாங்க நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கும். அதன் மூலம் கட்சியும் வலிமை பெறும். பின்னணியில் மேலும் சில சாதகங்கள் விளையலாம்.
இந்த ஒப்பந்தங்களினால், அன்வாரின் அரசியல் பலமும் ஆட்சி அதிகார பலமும் அதிகரித்திருக்கிறது என்பதை அன்வாரை எப்போதும் சாடும் வழக்கறிஞரும் முன்னாள் அமைச்சருமான சைட் இப்ராகிம் போன்றவர்களே ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.
-இரா.முத்தரசன்

