இந்தியப் பயணிகளுக்கான விசா தடையை மறுபரிசீலனை செய்யுங்கள்: முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் நஸ்ரி அஸீஸ் வேண்டுகோள்
கோலாலம்பூர்: தற்போது நடைமுறையில் இருக்கும் வழக்கத்தின்படி, இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கு 30 நாட்களுக்கான சுற்றுலா குடிநுழைவு அனுமதி (விசா) பிரச்சினையின்றி வழங்கப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டம் எதிர்வரும் டிசம்பர் 31-ஆம் தேதியோடு முடிவுக்கு வரும் என்றும், அதன் பின்னர் விசா இல்லாமல் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வர முடியாது என்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யும்படி, முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சரும், அமெரிக்காவுக்கான முன்னாள் மலேசியத் தூதருமான நஸ்ரி அஸீஸ் (படம்) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவிலிருந்து சுற்றுப்பயணிகளாக வருபவர்கள் இந்த நாட்டிலேயே கூடுதல் காலத்திற்குத் தங்கி விடுகிறார்கள் என்பதால் இந்தத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது என உள்துறை அமைச்சு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எத்தனை பேர் அவ்வாறு இங்கேயே தங்கி விடுகிறார்கள் என்பதை ஆய்வு செய்யுமாறு நஸ்ரி கேட்டுக்கொண்டுள்ளார். உதாரணத்திற்கு, சுமார் ஒரு லட்சம் பேருக்கும் மேல் இங்கே விசாவுடன் வந்துவிட்டுத் தங்கி விடுகிறார்கள் என்றால், அந்தத் திட்டத்தை ரத்து செய்வது பொருத்தமாக இருக்கும். அவ்வாறு இல்லாமல், ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே இவ்வாறு கூடுதல் காலத்திற்குத் தங்குவதால், அவர்களைக் கண்டுபிடித்து வெளியேற்றும் நடவடிக்கை எடுப்பதுதான் உசிதமாக இருக்குமே தவிர, மொத்தத் திட்டத்தையும் ரத்து செய்வது பொருத்தமாக இருக்காது என அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் அதிகமான சுற்றுப்பயணிகள் இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வருகை தருவது கண்கூடாகப் பதிவாகியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் 1.36 மில்லியன் இந்தியச் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வந்த நிலையில், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 14.6 விழுக்காடாக உயர்ந்து 1.56 மில்லியன் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை தந்திருக்கிறார்கள் என நஸ்ரி தெரிவித்தார். இதன் மூலம் தெரிவது என்னவென்றால், இந்தியச் சுற்றுப்பயணிகளுக்கான முக்கியத் தளமாக மலேசியா இருக்கிறது; அதனை நாம் தொடர்ந்து மேம்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று அவர் கூறினார்.
மேலும், நாடுகளுக்கிடையில் நாம் சரிசமமான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சீனாவிலிருந்து வருபவர்களுக்கு விசா இன்றி மலேசியாவுக்குள் நுழையும் சலுகையை வழங்கும் மலேசிய அரசாங்கம், இந்தியாவுக்கும் அத்தகையச் சலுகையை வழங்காவிட்டால் இந்தியாவுடனான நமது நல்லுறவும் பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
எனவே, இந்தியச் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருவதற்கான விசா விலக்கு நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து உள்துறை அமைச்சு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

