மலாக்கா காடெக்: 4-முனைப் போட்டியில் மஇகாவின் நடராஜா வெல்ல முடியுமா?
மலாக்கா: நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில், வேட்புமனுத் தாக்கல் முடிந்த நிலையில், காடேக் (Gadek) தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
இத்தொகுதியில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். மஇகா/தேசிய முன்னணி சார்பில் நடராஜா செல்லப்பா, ஜனநாயக செயல்கட்சி/பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் கே. ஜெகசீலன், பெர்சாமா கட்சி சார்பில் லெவின் பிரபாகரன்
புத்ரா கட்சி லைலா நொரிண்டா பிந்தி மவுன் ஆகியோரே அந்த நால்வராவர்.
பெர்சாத்து (BERSATU) எட்டு தொகுதிகளில் ஒன்றாக காடெக்கில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புத்ரா கட்சி இங்கு போட்டியிடுகிறது. பெர்சாத்து ஒதுங்கிக் கொண்டதற்கான காரணமும் தெரியவில்லை. கிளந்தான் மாநிலத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இப்ராகிம் அலி தலைவராக இருக்கும் புத்ரா கட்சி, பெர்சாத்து கூட்டணியாகப் போட்டியிடுகிறதா அல்லது தனித்துப் போட்டியிடுகிறதா என்பது போன்ற விவரங்கள் இன்னும் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை.
இத்தொகுதியில் மொத்தம் 16,617 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் மலாய் வாக்காளர்கள் ஆவர். போட்டியிடும் 4 வேட்பாளர்களில் மூவர் இந்தியர்கள்; புத்ரா கட்சியின் வேட்பாளர் லைலா நொரிண்டா மட்டுமே மலாய் இனத்தைச் சேர்ந்த பெண்மணி.
60%க்கும் அதிகமான மலாய் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில், புத்ரா வேட்பாளர் லைலா எந்த அளவுக்கு மலாய் வாக்குகளைப் பிரிப்பார் என்பதைப் பொறுத்தே மஇகா வேட்பாளரின் வெற்றித் தோல்விகள் தீர்மானிக்கப்படும். பெர்சாமா தலைவர் ரபிசி ரம்லிக்கும் இளம் மலாய் வாக்காளர்களிடையே ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அவரும் இங்கு தீவிரமாகப் பிரச்சாரம் செய்வார் என்பதால், பெர்சாமா கட்சியால் எந்த அளவுக்கு மலாய் வாக்குகளைத் திரட்ட முடியும் என்பதைப் பொறுத்தே மஇகா வேட்பாளரின் வெற்றி நிர்ணயிக்கப்படும்.
இத்தொகுதியில் சீன வாக்காளர்கள் 20.8% ஆகவும், இந்திய வாக்காளர்கள் 17.1% ஆகவும் உள்ளனர். வழக்கமாக ஜனநாயக செயல்கட்சிக்கு (DAP) பெரும்பாலான சீன வாக்குகள் கிடைக்கும். ஆனால், பக்காத்தான் கூட்டணி மூலம் பெருமளவில் மலாய் வாக்குகளை அவர்களால் பெற முடியுமா என்பது சந்தேகமே!
மலாக்கா தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கும் புதிய கட்சியான ‘பெர்சமா’, 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காடேக் தொகுதியிலும் களமிறங்கியுள்ள பெர்சமா கட்சி எந்த அளவுக்கு இங்கு வாக்குகளை ஈர்க்கப் போகிறது என்பதை தேர்தல் முடிவுகளே தெளிவுபடுத்தும்.

