நெகிரி மந்திரி பெசார் – ஆட்சியாளர் சந்திப்பு! முடிவுக்கு வருகிறதா  நெகிரி செம்பிலான் விவகாரம்?

சிரம்பான்: கடந்த நான்கு மாதங்களாக இழுபறியாக நீடித்து வந்த நெகிரி செம்பிலான் மாநில அரசியல் விவகாரம், ஒருவழியாக அம்மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் அவர்களின் பதவி விலகலுடன் ஒரு முடிவுக்கு வந்திருப்பது போல் தோன்றுகிறது.

மேலும் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ், பதவி விலகிய இஸ்மாயில் லாசிமைச் சந்தித்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்மின் பதவி விலகலுக்கான கடிதத்தை தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் ஸாம்ரி அப்துல் காதிர், நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துங்கு முஹ்ரிஸிடம் ஒப்படைத்தார். அந்தக் கடிதம் தேசிய முன்னணியின் தலைவர் அஹ்மத் சாஹிட் ஹமிடிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 16) சமர்ப்பிக்கப்பட்ட மந்திரி பெசாரின் பதவி விலகல் கடிதத்தைத் தொடர்ந்து, இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், மந்திரி பெசாரும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்திற்குத் தாங்கள் அனுப்பிய கடிதத்தை மீட்டுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், துங்கு முஹ்ரிஸ் இனிமேல் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் இல்லை என்றும், அவரை விலக்கிவிட்டோம் என்றும் கூறி மந்திரி பெசாரும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்திற்குக் கடிதம் அனுப்பியிருந்தனர். அந்தக் கடிதம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

அதைத்தொடர்ந்து, பள்ளிவாசல் தொழுகை ஒன்றுக்கு வருகை தந்தபோது, நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துங்கு முஹ்ரிஸைச் சந்தித்த மந்திரி பெசாரை, ஆட்சியாளர் கடுமையான வார்த்தைகளால் சாடினார். “என்னைப் பார்க்காதீர்கள்; என்னை விலக்கும்படி கடிதம் எழுதிவிட்டு, பின் ஏன் என்னை வந்து பார்க்கிறீர்கள்?” என்று பொதுவெளியில் அவர் மந்திரி பெசாரைக் கடுமையாகக் கடிந்துகொண்டார்.

அந்தப் பொதுவெளிச் சாடலைத் தொடர்ந்து, மந்திரி பெசாரும் மற்ற ஆட்சிக்குழு உறுப்பினர்களும் மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்திற்கு அனுப்பிய கடிதமும் வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது அந்தக் கடிதம் மந்திரி பெசாராலும், ஆட்சிக் குழு உறுப்பினர்களாலும் மீட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தச் சிக்கல் நீடித்து வந்த நிலையில், மந்திரி பெசார் தனது பதவியில் தொடர்ந்தாலும், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே பதவியிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர்.

தற்போது நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவி விலகியுள்ளதால், மாநில ஆட்சியாளர் புதிய மந்திரி பெசாரையும் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களையும் நியமிக்கக்கூடும் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன. அந்த நியமனங்களின்படி, தற்போதைய மந்திரி பெசார் மீண்டும் மந்திரி பெசாராகவோ அல்லது ஆட்சிக்குழு உறுப்பினராகவோ நியமிக்கப்படுவாரா, அல்லது பழைய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மீண்டும் இடம்பெற வாய்ப்பிருக்கிறதா என்பது போன்ற விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் தன் சொந்த விருப்பத்தின்பேரில் பதவி விலகினார் என்றும் அவருக்கு நெருக்குதல் எதுவும் தரப்படவில்லை என்றும் அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி தெரிவித்தார்.

எனினும், இன்றைய நிலையில் நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் தனது பதவியில் தொடர்வார் என்ற அங்கீகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளதாலும், புதிய மந்திரி பெசாரை நியமிக்க ஆட்சியாளருக்குத் தற்போது வாய்ப்பு கிடைத்திருப்பதாலும், நெகிரி செம்பிலான் மாநில விவகாரம் கூடிய விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்று கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *