ம.இ.கா தலைமைச் செயலாளர் ஆனந்தன் பதவி விலகினாரா? – ஊடகத் தகவல்

கோலாலம்பூர்: ம.இ.கா தலைமைச் செயலாளர் டத்தோ எஸ். ஆனந்தன் (படம்) தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக, ம.இ.கா வட்டாரங்களை மேற்கோள்காட்டி ‘ஃப்ரீ மலேசியா டுடே’ (Free Malaysia Today) இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ம.இ.காவுடன் நீண்டகால அரசியல் பயணம் கொண்டிருந்த ஆனந்தன், ம.இ.கா கெடா மாநிலத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டர்) பணியாற்றிய அவர், தலைமைச் செயலாளர் ஆவதற்கு முன்னர் இஸ்மாயில் சப்ரி யாகோப் பிரதமராக இருந்த தருணத்தில், அவரின் இந்தியர் விவகாரங்களுக்கான அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார். இஸ்மாயில் சப்ரியின் பதவிக்காலம் முடிந்ததும், ஆனந்தனும் அந்தப் பதவியிலிருந்து விலகினார்.

பின்னர், 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அப்போதைய தலைமைச் செயலாளர் ஆர்.டி. ராஜசேகரனுக்குப் பதிலாக ஆனந்தன் ம.இ.கா தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆர்.டி. ராஜசேகரன் தொடர்ந்து ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் அரசியல் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

ஆனந்தன் பதவி விலகியதற்கான காரணங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் பதவி விலகினார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஇகா மத்திய செயலவை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் விலகியுள்ளதாக அறியப்படுகிறது. கடந்த 2024-இல் நடைபெற்ற கட்சித் தேர்தலில் அவர் மத்திய செயலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரின் பதவி விலகலைத் தொடர்ந்து, அடுத்த தலைமைச் செயலாளராக யார் பொறுப்பேற்பார் என்ற ஆரூடங்கள் ம.இ.காவில் எழுந்துள்ளன. தற்போது ம.இ.காவின் நிர்வாகச் செயலாளராகப் பணியாற்றி வரும் டத்தோ ஏ.டி. குமாரராஜா அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அடுத்த மாதம் (நவம்பர்) இறுதியில் ம.இ.காவின் தேசியப் பொதுப் பேரவை ஜோகூர் பாரு நகரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியப் பொதுப் பேரவை பொதுவாக ம.இ.கா தலைமைச் செயலாளரின் மேற்பார்வையில், அவரது நிர்வாகத்தின் கீழ் நடைபெறும் ஒரு முக்கியக் கட்சி நிகழ்ச்சியாகும்.

இந்த ம.இ.கா பொதுப் பேரவை நடைபெறவிருக்கும் தருணத்தில், ஆனந்தன் திடீரெனப் பதவி விலகியுள்ளது பல்வேறு ஆரூடங்களையும் ஐயப்பாடுகளையும் எழுப்பியுள்ளது. பொதுப் பேரவையின் பணிகளை நிறைவேற்றவும், உடனடியாகக் கவனிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாலும், அடுத்த தலைமைச் செயலாளர் உடனடியாகத் தேசியத் தலைவரால் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *