மலாக்கா மாச்சாப் ஜெயா: பெர்சாமாவால் தோல்வி காணப் போவது தேசிய முன்னணியா?பக்காத்தான் ஹாரப்பானா?
மலாக்கா: எதிர்வரும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்று மாச்சாப் ஜெயா. இம்முறை இத்தொகுதியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. தேசிய முன்னணி இங்கு போட்டியிடும் வேளையில், பக்காத்தான் ஹரப்பான் (PKR) மற்றும் பெர்சாமா ஆகிய கட்சிகளும் களமிறங்கியுள்ளன.
மூன்றாவது வேட்பாளராக பிரசாந்த் குமார் இத்தொகுதியில் பெர்சாமா கட்சி சார்பில் போட்டியிடுகிறார். 16,030 வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில், மலாய் வாக்காளர்கள் 47 விழுக்காடாகவும், சீன வாக்காளர்கள் 36 விழுக்காடாகவும் உள்ளனர்.
பிகேஆர் மற்றும் தேசிய முன்னணி ஆகிய இரண்டுமே சீன வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், மலாய் வாக்குகள் எந்தப் பக்கம் செல்லும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. பெரும்பான்மையான மலாய் வாக்குகள் தேசிய முன்னணி பக்கமே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய வாக்குகளை எந்த அளவுக்குப் பெற முடியுமோ, அதை வைத்துத்தான் இங்கு வெற்றி பெறப்போவது பிகேஆர் கட்சியா அல்லது தேசிய முன்னணியா என்பது தெரியவரும்.
இத்தொகுதியில் 13.7 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் உள்ளனர். இந்திய வாக்காளர்களிடையே பெர்சாமா கட்சியின் பிரசாந்த் குமார் நீண்ட காலமாக, அதாவது கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மலாக்காவின் முன்னாள் முதலமைச்சருக்குச் சிறப்புச் செயலாளராகவும், இந்தியப் பிரிவு அதிகாரியாகவும் பணியாற்றியவர் என்ற முறையிலும், பிகேஆர் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டு நீண்ட காலம் பணியாற்றியவர் என்ற முறையிலும் அவர் மலாக்கா அரசியலுக்கு நன்கு அறிமுகமானவர். தற்போது ரபீசி ரம்லி தலைமையிலான பெர்சாமா கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்திய வாக்குகளை அவரால் எந்த அளவுக்குப் பெற முடியும் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டும். கடந்த 2021 மலாக்கா சட்டமன்றத் தேர்தலில், ஐந்து முனைப் போட்டியில் 938 வாக்குகள் பெரும்பான்மையில் மசீச வேட்பாளர் இங் வீ ஹிசெம் இங்கு வெற்றி பெற்றார். அவர் மீண்டும் இந்த முறை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
கடந்த 2021 மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் குமார் ரிம் தொகுதியில் பிகேஆர் வேட்பாளராகப் போட்டியிட்டார். தற்போது அவர் மாச்சாப் ஜெயா தொகுதியில் பெர்சாமா வேட்பாளராகத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். பெர்சாமா இத்தொகுதியில் வெல்வது கடினம் என்றாலும், அவர் எந்த அளவுக்கு வாக்குகளைப் பிளவுபடுத்தப் போகிறார் என்பதைப் பொறுத்தே மற்ற இரண்டு கட்சிகளின் வெற்றித் தோல்விகள் தீர்மானிக்கப்படும்.
பிரசாந்த் குமார் ஏற்கனவே பிகேஆர் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டவர் என்பதால், அவர் பாக்கத்தான் ஹரப்பான் பக்கமாகச் செல்லக்கூடிய வாக்குகளைப் பிளவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்முனைப் போட்டியில் அவர் ஒருவரே இந்திய வேட்பாளர் என்பதால், அவர் இந்திய வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாக உள்ளன.
மாச்சாப் ஜெயா தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பக்காத்தான் வாக்குகளை பெர்சாமா வேட்பாளர் பிரசாந்த் குமார் பிளவுபடுத்துவதன் மூலம், தேசிய முன்னணியின் மசீச வேட்பாளரே இங்கு வெல்லக் கூடிய சாத்தியங்கள் அதிகம் என்பதை முதற்கட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.

