நஜிப் வீட்டுக் காவல்-அந்தோணி லோக் பதவி விலகல்: மலாக்கா தேர்தலில் யாருக்கு பாதிப்பு?

கோலாலம்பூர்: நஜிப் வீட்டுக் காவல் சிறைவாசத்தை அனுபவிக்க இல்லம் திரும்பி விட்டார். அதற்குப் பதிலடியாக, வாக்குறுதிஅளித்த படி அந்தோணி லோக் போக்குவரத்து அமைச்சர் பொறுப்பைத் துறந்து விட்டார். நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா தேர்தலில் இந்த நகர்வுகள் எத்தகையப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

நேற்று ஒரே நாளில், நாடு முழுவதிலும் உள்ள அரசியல் வட்டாரங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு பரபரப்பான சம்பவங்களும் அரங்கேறின.

பல்வேறு சர்ச்சைகள், சட்ட வாக்குவாதங்கள் மற்றும் நீதித்துறை கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், ஒரு வழியாக முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தனது வீட்டுக் காவல் சிறைவாசத்தைக் கழிப்பதற்காக லும்பாக் டூட்டாவில் உள்ள தனது இல்லத்திற்கு நேற்று இரவு திரும்பினார்.

அவரை ஏற்றி வந்த வாகனம், நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) இரவு 9:35 மணியளவில் அவரது இல்லத்தை வந்தடைந்தது. இரண்டு காவல்துறை மோட்டார் சைக்கிள்கள் முன்னே அணிவகுத்துச் செல்ல, 10 காவல்துறை வாகனங்கள் புடைசூழ அவர் தனது இல்லத்தைச் சென்றடைந்தார்.

நஜிப் துன் ரசாக்

ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் காஜாங் சிறையில் இருந்த அவர், தனது எஞ்சிய சிறைவாச காலத்தை வீட்டிலிருந்தே கழிப்பார். 73 வயதான அவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1எம்டிபி தொடர்பான ஒரு வழக்கில் அவருக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தண்டனையை அவர் வீட்டுக் காவல் முடிந்ததும் அனுபவிக்க மீண்டும் சிறை செல்ல நேரிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நஜிப் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கு விவகாரம் தொடர்பாக 12 வருட சிறைத்தண்டனையும், 210 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2024-ஆம் ஆண்டில் மன்னிப்பு வாரியம் அவரது சிறைத்தண்டனையைப் பாதியாக (12 ஆண்டிலிருந்து 6 ஆண்டுகளாக) குறைத்தது; மேலும் அவர் செலுத்த வேண்டிய அபராதத் தொகையும் 210 மில்லியனிலிருந்து 50 மில்லியனாகக் குறைக்கப்பட்டது.

நடப்பு மாமன்னர் சுல்தான் இப்ராகிம், நஜிப் 50 மில்லியன் அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர், தனது எஞ்சிய சிறைவாசத்தை 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை தனது இல்லத்திலேயே கழிக்கலாம் என்ற நிபந்தனையுடன் கூடிய உத்தரவை மன்னிப்பு வாரியத்தின் மூலம் பிறப்பித்தார். இந்த 50 மில்லியன் அபராதத் தொகையைக் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நஜிப்பின் சார்பில் அம்னோ (UMNO) செலுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 50 மில்லியன் தொகையைச் செலுத்தியவர்களின் பட்டியலை வெளியிடத் தயார் என்றும் அம்னோ தேசியத் தலைவர் அகமட் சாஹிட் ஹாமிடி அறிவித்துள்ளார்.

50 மில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்டாலும் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படுவதில் சில சட்ட சிக்கல்கள் எழுந்தாலும், சில நாட்கள் தாமதத்திற்குப் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் நேற்று முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

வாக்களித்தபடி பதவி விலகிய அந்தோணி லோக்…

இதற்கிடையில், “நஜிப் வீடு வந்து சேர்ந்தால் தான் பதவி விலகப் போவதாக” ஏற்கனவே அறிவித்திருந்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் (படம்), நேற்று முதல் தனது பதவி விலகல் அமலுக்கு வருவதாகத் தெரிவித்தார்.

நஜிப் மன்னிப்பு வழங்கப்பட்டு வீட்டுக் காவல் தண்டனையை அனுபவிப்பதற்காக வீடு திரும்பிய அதே நாளில், தான் பதவியிலிருந்து விலகப்போவதாகத் தெரிவித்திருந்தபடி, அந்தோணி லோக் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) முதல் தனது பதவி விலகல் அமலுக்கு வருவதாக அறிவித்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டில் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், போக்குவரத்து அமைச்சராக அந்தோணி லோக் நியமிக்கப்பட்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் அப்பதவியை வகித்து வந்தார்.

மலாக்கா தேர்தலில் எத்தகைய பாதிப்பு?

அந்தோணி லோக் விலகலைத் தொடர்ந்து மலாக்கா தேர்தலில் சீன வாக்காளர்கள் ஜசெகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே வேளையில் நடுநிலையான – ஊழலுக்கு எதிரான உறுதிப்பாடு கொண்ட – மலாய் வாக்காளர்கள்  மத்தியில் நஜிப் வீட்டுக் காவல் காரணமாக அதிருப்திகள் எழுந்துள்ளதால் – அந்த வாக்குகள் பெர்சாமா அல்லது பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருப்பதாக சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அதே வேளையில் நஜிப் இல்லம் திரும்பியது அம்னோவுக்கு ஒரு வெற்றியாக சில தரப்பினரால் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அம்னோவின் வாக்கு விழுக்காடு மேலும் உயரக் கூடும் என்ற ஆரூடமும் கூறப்படுகிறது.

தற்போது 21 தொகுதிகளைக் கொண்டுள்ள தேசிய முன்னணி, அந்த எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொண்டாலே நடப்பு சூழ்நிலையில் அந்தக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியாகப் பார்க்கப்படும். மேலும் ஓரிரு தொகுதிகளைக் கூடுதலாக வென்றால் சொல்ல வேண்டியதில்லை. தேசிய முன்னணியின் அத்தகைய வெற்றிக்கு நஜிப்பின் வீட்டுக் காவல்தான் காரணம் என அம்னோவினர் கொண்டாடுவார்கள்.

அதே சமயத்தில் 21 தொகுதிகளுக்கும் குறைவாக தேசிய முன்னணி வெற்றி பெற்றாலோ, அல்லது பல தொகுதிகளில் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலோ, தேசிய முன்னணியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாகக் கருதப்படும். அதற்குக் காரணம், நஜிப்பின் வீட்டுக் காவல்தான் என்ற குறைகூறல்களும் எழும்.

இப்படியாக எப்படிப் பார்த்தாலும், நஜிப்பின் வீட்டுக் காவலும், அந்தோணி லோக் பதவி விலகலும் மலாக்கா தேர்தல் முடிவுகளோடு சம்பந்தப்படுத்தி விவாதிக்கப்படும்.

ஒரு சில அரசியல் பார்வையாளர்களோ, பெர்சாமா கட்சி எந்த அளவுக்கு வாக்குகளைப் பிளவுபடுத்தும் என்பதைப் பொறுத்தே – மலாக்கா தேர்தல் முடிவுகள் அமையும் எனக் கருதுகின்றனர். 16 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் பெர்சாமா, இரண்டு இந்திய வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளது. அவர்களில் லெவின் காடெக் தொகுதியிலும், பிரசாந்த் குமார் மாச்சாப் ஜெயா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *